அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார். அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 12ம் நிலை வீரரான அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸுடன் மோதினார். 3 மணி நேரம் 45 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 7-6(7-3), 4-6, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு கால் இறுதி ஆட்டத்தில் 4ம் நிலை வீரரான இத்தாலியின் ஜன்னிக் ஷின்னர், 5ஆம் நிலை வீரரான ரஷ்யாவின் ஆந்த்ரே ரூப்லெவுடன் மோதினார். இதில் ஜன்னிக் ஷின்னர் 6-4, 7-6(7-5), 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்றில் கால்பதித்தார். மகளிருக்கான கால் இறுதி சுற்றில் 4-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் கோகோ காஃப், உக்ரைனின் 37ஆம் நிலை வீராங்கனையான மார்டா கோஸ்ட்யுக்கை 7-6(8-6), 6-7(3-7), 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரை இறுதி சுற்றில் கால்பதித்தார். இந்த ஆட்டம் 3 மணி நேரம் 8 நிமிடங்கள் நடைபெற்றது. மற்றொரு கால் இறுதி ஆட்டத்தில் 2ஆம் நிலை வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலெங்கா, 11ஆம் நிலை வீராங்கனையான செக்குடியரசின் பார்போரா கிரஜிகோவாவை வீழ்த்தி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
Leave Comments