அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஜிவெரேவ் ஆகியோர் 3வது சுற்றுக்கு முன்னேறினர்.
அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் 2ஆம் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், இத்தாலியின் லோரென்சோ சோனேகோவை எதிர்த்து விளையாடினார். இதில் அல்கராஸ் 6-4, 6-7 (3-7), 6-3, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார். 6ஆம் நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஜிவெரேவ் 7-5, 3-6, 4-6, 7-6 (7-5), 7-6 (10-7) என்ற செட் கணக்கில் 4 மணி நேரம் 31 நிமிடங்கள் போராடி சுலோவேக்கியாவின் லுகாஸ் கெலினை வீழ்த்தினார். 11ஆம் நிலை வீரரான நேர்வேயின் காஸ்பர் ரூடு 6-3, 6-7 (5-7), 6-3, 3-6, 7-6 (10-7) என்ற செட் கணக்கில் அவுஸ்திரேலியாவின் மேக்ஸ்புருர் செல்லையும், 14ஆம் நிலை வீரரான டாமி பால் 6-2, 3-6, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் கிரேட் பிரிட்டனின் ஜேக் டிராப்பரையும் வீழ்த்தி -வது சுற்றில் கால்பதித்தனர். 8ஆம் நிலை வீரரான டென்மார்க்கின் ஹோல்கர் ரூன் 6-7 (4-7), 4-6, 6-4, 3-6 என்றசெட் கணக்கில் 122ஆம் நிலைவீரரான பிரான்ஸின் ஆர்தர்காசாக்ஸிடம் தோல்வி அடைந்தார். இந்தியாவின் சுமித் நாகல் 6-2, 3-6, 5-7, 4-6 என்ற செட் கணக்கில் சீனாவின் ஜுன்செங் ஷாங்கிடம் வீழ்ந்தார். மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் முதல் நிலை வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக் 6-4, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் டேனியல் காலின்ஸை வீழ்த்தி 3வது சுற்றில் நுழைந்தார். 5ஆம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 4-6, 2-6 என்ற நேர் செட் கணக்கில் பிரான்ஸின் கிளாரா பர்லியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இதேபோன்று 3ஆம் நிலை வீராங்கனையான கஜகஸ்தானின் எலெனா ரைபகினா 4-6, 6-4, 6-7 (20-22) என்ற செட் கணக்கில் ரஷ்யாவின் அனா பிளின்கோவாவிடம் தோல்வி அடைந்தார். ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, அவுஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடியானது தங்களது முதல் சுற்றில் அவுஸ்திரேலியாவின் டக்வொர்த், பால்மன்ஸ் ஜோடியை எதிர்த்து விளையாடியது. இதில் ரோகன் போபண்ணா ஜோடி 7-6 (7-5),4-6, 7-6 (10-2) என்ற செட்கணக்கில் வெற்றிபெற்று 2வது சுற்றுக்கு முன்னேறியது.
Leave Comments