இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைமை தெரிவு ஒத்திவைக்கப்படும் சூழல் எழுந்துள்ளது.
எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இலங்கை தமிழ் அரசு கட்சியின் தேசிய மாநாடு, திட்டமிட்ட திகதியில் நடக்காமல், பிற்போடப்படும் சூழல் எழுந்துள்ளது. கட்சியின் பதில் பொதுச்செயலாளர் பா.சத்தியலிங்கம் நோய்வாய்ப்பட்டுள்ளதால், கூட்ட ஆவணங்களில் அவர் கையெழுத்திட முடியாத சூழல் எழுந்துள்ளது. இதனால் கூட்டத்துக்கான அழைப்பு கடிதங்களே இன்னும் உறுப்பினர்களுக்கு அனுப்பப்படவில்லை. இலங்கை தமிழ் அரசு கட்சியின் தேசிய மாநாட்டில் புதிய தலைவர் தெரிவு இடம்பெறவுள்ளது. தலைமை பதவிக்கு எம்.ஏ.சுமந்திரன், சி.சிறீதரன், சீ.யோகேஸ்வரன் ஆகியோர் போட்டியிட விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் சீ.யோகேஸ்வரன் போட்டி தினத்தில் போட்டியிலிருந்து விலகிக் கொள்வார். தமிழ் அரசு கட்சியின் வரலாற்றில் தலைமை பதவிக்காக வாக்கெடுப்பு நடக்கும் முதலாவது சந்தர்ப்பமாக, எதிர்வரும் தலைமை தெரிவே அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டம் 20ஆம் திகதி திருகோணமலையில் நடக்கிறது. தற்போதைய மத்தியகுழுவின் இறுதி கூட்டம் இது. இதற்கு மறுநாள் (21) பொதுக்குழு கூட்டம் நடக்கும். அங்கு தலைவர் தெரிவு இடம்பெறும். தலைவர் பதவிக்கு ஒருவரின் பெயர் பிரேரிக்கப்பட்டால், ஏகமனதாக அவர் தெரிவாகுவார். ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் பிரேரிக்கப்பட்டால், வாக்கெடுப்பு நடைபெறும். இலங்கை தமிழ் அரசு கட்சியின் வரலாற்றில் வாக்கெடுப்பு நடக்கும் முதலாவது சந்தர்ப்பமாக இது அமையும். தலைமை பதவிக்கு போட்டியிடும் சிறிதரன், சுமந்திரன் ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் மோதிக்கொண்டிருக்கிறார்கள். இந்த பின்னணியில், இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைமை தெரிவு திட்டமிட்ட திகதியில் -21ஆம் திகதி- நடைபெறும் வாய்ப்பு இல்லாமல் போயுள்ளது. பதில் பொதுச்செயலாளர் பா.சத்தியலிங்கம் நுரையீரல் தொற்றுக்குள்ளாகி, உடல்நலம் குன்றியுள்ளார். அவர் கூட்ட ஆவணங்களில் கையெழுத்திடும் நிலையிலும் இல்லை. அவரை முழுமையான ஓய்வில் இருக்குமாறு வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால், பொதுக்குழு கூட்டத்துக்குக்கான அழைப்புக்கள் இதுவரை அனுப்பப்படவில்லை. பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளுபவர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டு, அந்த பெயர் விபரத்தின் அடிப்படையிலேயே கூட்ட மண்டபத்துக்குள் அனுமதிக்கப்பட வேண்டும். இம்முறை தலைவர் தெரிவுக்காக வாக்கெடுப்பு நடைபெறவுள்ளதால் விதிகளை இறுக்கமாக பின்பற்ற வேண்டும். எனினும், இதுவரை கடிதங்களில் பதில் பொதுச்செயலாளர் கையொப்பமிடவில்லை. இன்று 17ஆம் திகதி. 21ஆம் திகதி பொதுக்குழு கூட்டம். இனிமேல் கடிதம் அனுப்பப்பட்டு, கூட்டம் நடத்த வாய்ப்பில்லாத படியால், 2 வாரங்கள் அளவில் தலைவர் தெரிவு ஒத்தி வைக்கப்படும் என தமிழ் அரசு கட்சியின் முக்கிய தலைவர் ஒருவர் தமிழ் பக்கத்திடம் தெரிவித்தார்.
Leave Comments