ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் மறைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் மறைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் வீட்டிற்கு சென்றுள்ளனர். பிரசன்ன ரணதுங்க, மஹிந்தானந்த அளுத்கமகே, இந்திக்க அனுருத்த, சி. பீ.ரத்நாயக்க, நாமல் ராஜபக்ஷ, டி.வி.சானக்க உள்ளிட்ட அமைச்சர்கள் குழுவும் கலந்துகொண்டனர். இன்று காலை கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சரின் இறுதிக் கிரியைகளை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஆராச்சிக்கட்டில் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ராகம போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனையின் பின்னர் அவரது சடலம் கொழும்பில் உள்ள தனியார் பூக்கடைக்கு கொண்டு வரப்படவுள்ளது. அங்கு இன்று மாலை 6 மணி முதல் நாளை நண்பகல் 12 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, உடல் அடக்கம் செய்யப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீலங்கா பொது முன்னணியின் முக்கியஸ்தர்கள் ஆராச்சிக்கட்டுவவில் இடம்பெற்ற இறுதிக் கிரியைகளில் பங்கேற்கவுள்ளனர். சனத் நிஷாந்தவின் மரணத்தின் பின்னர் இன்று அதிகாலை முதல் அமைச்சர்கள் பலரும் அவரது சடலம் வைக்கப்பட்டுள்ள ராகம வைத்தியசாலைக்கு வந்த வண்ணமிருந்தனர். இந்த விபத்தில் அமைச்சர் சனத் நிஷாந்தவின் பாதுகாப்பு உத்தியோகத்தராக இருந்த பொலிஸ் கான்ஸ்டபிளும் உயிரிழந்துள்ளதுடன் சாரதியும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பயணித்த ஜீப் இன்று அதிகாலை 2 மணியளவில் அதே திசையில் பயணித்த கொள்கலன் பாரவூர்தியின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது. கட்டுநாயக்காவிலிருந்து கொழும்பு நோக்கி வந்து கொண்டிருந்த போது, நெடுஞ்சாலையின் 11.01 கிலோமீற்றர் தூணுக்கு அருகில் விபத்துக்குள்ளாகி, ஜீப் வீதியின் பாதுகாப்பு வேலியிலும் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் படுகாயமடைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, அவரது மெய்ப்பாதுகாவலராக செயற்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் அவரது சாரதி ஆகியோர் ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோர் வாகன விபத்தில் காயமடைந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். ஜீப் ஓட்டுனர் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ராகம போதனா வைத்தியசாலையில் பிரேதப் பரிசோதனை நடைபெறவுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் கந்தானை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 1975 ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் திகதி ஹலவத்தையில் பிறந்த சனத் நிஷாந்த பெரேரா நான்கு சகோதர சகோதரிகளைக் கொண்ட குடும்பத்தில் ஐந்தாவது நபராவார். ஹலவத்தை புனித மரியாள் ஆண்கள் கல்லூரியின் பழைய மாணவரான இவர், 1997 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபைக்கு போட்டியிட்டு தேர்தல் அரசியலில் பிரவேசித்தார். 2004 ஆம் ஆண்டு முதல் வடமேற்கு மாகாண சபையை பிரதிநிதித்துவப்படுத்திய சனத் நிஷாந்த, அமைச்சுப் பதவியையும் வகித்துள்ளார். 2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து போட்டியிட்டு 68,240 வாக்குகளைப் பெற்று மாவட்டத்தில் முதலாவதாக பாராளுமன்றத்திற்கு தெரிவானார். கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியான பின்னர் மீன்பிடி அமைச்சராகப் பதவியேற்ற அவர் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் அதிக வாக்குகளைப் பெற்ற வேட்பாளராகவும் ஆனார். அப்போது அவர் பெற்ற விருப்பு வாக்குகள் 80,082 ஆகும். அவர் இறக்கும் போது, அவர் இராஜாங்க நீர் வழங்கல் அமைச்சராக பணியாற்றினார். சட்டத்தரணியான சாமரி பெரேராவை மணந்த சனத் நிஷாந்த, மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகனின் தந்தையாவார்.
Leave Comments