முன்னாள் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை பிரிந்து வாழ்ந்து வந்த பாகிஸ்தான் கிரிக்கெட்டின் முன்னாள் சகலதுறை வீரரான சோயிப் மாலிக், பாகிஸ்தான் நடிகை சனா ஜாவேதை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட்டின் முன்னாள் சகலதுறை வீரரான சோயிப் மாலிக், பாகிஸ்தான் நடிகை சனா ஜாவேதை திருமணம் செய்து கொண்டதாக இன்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளார். முன்னாள் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். சோயிப் மாலிக், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சனாவுடனான திருமண புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதேபோல் சனா ஜாவேதும் தனது சமூக வலைதளத்தில் இந்தத் திருமண புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். ஜாவேத் தனது இன்ஸ்டாகிராமில் தனது பெயரை சனா சோயப் மாலிக் என மாற்றினார். இத்திருமண அறிவிப்பு மூலமாக சானியா மிர்சா, சோயிப் மாலிக் இருவரும் பிரிந்து விட்டதாகக் கூறப்பட்ட செய்தி உறுதியாகி இருக்கிறது. முன்னதாக, சனியா மிர்சா சமூக வலைதள பதிவு ஒன்றில், "திருமணம் கடினமானது, விவாகரத்து கடினமானது. உங்கள் கடினமானதை தேர்வு செய்யுங்கள். உடல் பருமன் கடினமானது, சிக்கென்று இருப்பது கடினமானது, உங்கள் கடினமானதை தேர்வு செய்யுங்கள். கடனாளியாக இருப்பது கடினமானது, நிதி சார்ந்து ஒழுக்கமாக இருப்பது கடினமானது, உங்கள் கடினமானதை தேர்வு செய்யுங்கள். தொடர்பு கொள்வது கடினமானது, தொடர்பு கொள்ளாமல் இருப்பது கடினமானது, உங்கள் கடினமாதை தேர்வு செய்யுங்கள். வாழ்க்கை எளிதானது இல்லை. அது எப்போதும் கடினமானது. ஆனால் நம்முடைய கடினத்தை நாமே தேர்வு செய்யலாம். புத்திசாலித்தனமாக தேர்வு செய்யுங்கள்" என்று தெரிவித்திருந்தார். சானியா மிர்சா - சோயிப் மாலிக் திருமணம் கடந்த 2010ஆம் ஆண்டு இஸ்லாமிய மதப்படி ஐதராபாத்தில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பாகிஸ்தானின் சியால்கோட்டில் வரவேற்பு நடந்தது. இந்த இணையருக்கு 2018ஆம் ஆண்டு இஷான் மிர்சா மாலிக் என்ற குழந்தை பிறந்தது. திருமணத்தில் இருந்து தம்பதிகள் துபாயில் வசித்து வந்தனர். விளையாட்டு நட்சத்திர தம்பதிகள் பிரிந்து விட்டனர் என்ற வதந்திகள், சானியா- சோயிப் இருவரும் தங்களது மகனின் பிறந்த நாளை கடந்த ஆண்டு ஒன்றாக இணைந்து கொண்டாடிய போது சற்றே ஓய்ந்திருந்தது. பின்னர் கடந்த ஆண்டு இறுதியில் தம்பதியர் இருவரும் தங்களின் சமூகவலைதள ‘பயோ’வில் செய்த மாற்றங்களால் மீண்டும் பரவத் தொடங்கியது. சோயிப் மாலிக் 2023ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் பயோவை சூப்பர் உமன் சானியா மிர்சாவின் கணவன் என்பதில் இருந்து உண்மையாக ஆசீர்வதிக்கப்பட்ட குழந்தையின் தந்தை என மாற்றியிருந்தார். அதேபோல் சானியா மிர்சா, சோயிப் மாலிக் இருவரும் தங்களது சமூக வலைதள பக்கத்தின் ப்ரோஃபைல் படத்தில் இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படங்களை நீக்கி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave Comments