3,5,8 வயதான பிள்ளைகளை வீட்டுக்குள் பூட்டி வைத்து விட்டு, சிவனொளிபாதமலை யாத்திரைக்கு சென்ற பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எட்டு, ஐந்து மற்றும் மூன்று வயதுடைய மூன்று பிள்ளைகளை வீட்டில் தனியாக விட்டுவிட்டு, சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்றதாகக் கூறப்படும் தம்பதியரை கைது செய்ததாக குளியாப்பிட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர். திகல்ல எலத்தலாவ பிரதேசத்தைச் சேர்ந்த தம்பதியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 119 பொலிஸ் அவசர அழைப்புச் சேவைக்கு கிடைத்த தகவலின் பேரில், உடனடியாக வீட்டுக்குச் சென்ற பொலிஸார், கதவுகள் பூட்டப்பட்டிருந்த வீட்டில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த குழந்தைகளை கண்டுள்ளனர். மூன்று குழந்தைகளையும் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். வீட்டில் பாண் மற்றும் பிஸ்கட்களை சாப்பிட வைத்துவிட்டு, மற்றவர்களுடன் புனித யாத்திரை சென்றுள்ளனர். யாத்திரை முடிந்தவுடன் பெற்றோர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குழந்தைகளின் தாயார் வைத்தியசாலையில் உள்ள குழந்தைகளின் பாதுகாப்பிற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குழந்தைகளின் நிலை கவலைக்கிடமாக இல்லை என்று மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
Leave Comments