அமேசானை பிறப்பிடமாகக்கொண்ட மரவள்ளிக்கிழங்கு 17ஆம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்தது. முதன்முதலில் போர்ச்சுகீசியர்களால் கேரளாவில் அறிமுகப் படுத்தப்பட்டது. ஆபிரிக்காவில் அதிகளவில் விளைகிறது.
மரவள்ளிக்கிழங்கு என்பது பாரம்பர்யம்மிக்க கிழங்கு. யுத்த காலங்களில் சில நேரம் மக்கள் மரவள்ளிக்கிழங்கை மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழ்ந்ததாகக் கூறப்படுவதுண்டு. இந்தக் கிழங்கில் நார்ச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம் இருப்பதால் உண்ட உணவு ஜீரணமாக உறுதுணை நிற்பதுடன், வயிற்றுக்கோளாறுகளில் இருந்தும் நம்மைக் காக்கிறது. எலும்புகள் வலுப்பட உதவுகிறது. `கொழுத்தவனுக்கு கொள்ளு; இளைத்தவனுக்கு எள்ளு’ என்பது போலவே, `இளைத்தவனுக்கு மரவள்ளிக்கிழங்கு’ என்றும் கூறலாம். கார்போஹைட்ரேட் அதிகம் இருப்பதால், இது உடல் இளைத்தவர்களுக்கு எடை அதிகரிக்க உதவுகிறது. இத்தகைய சிறப்புமிக்க மரவள்ளிக்கிழங்கை அடிக்கடி உணவில் சேர்க்கும் விதமாக கீர், அல்வா, வடை, புட்டு, கிரேவி என, சுவையில் அசத்தும் பல வகையான ரெசிப்பிகளை வழங்குகிறார் வேலூரைச் சேர்ந்த சமையற்கலைஞர் எஸ்.மீனாட்சி. மரவள்ளிக்கிழங்கு மசால்வடை தேவையானவை: மரவள்ளிக்கிழங்கு - கால் கிலோ ஊறவைத்த கடலைப்பருப்பு - 200 கிராம் பச்சரிசி மாவு - ஒரு கைப்பிடி அளவு இஞ்சி - ஒரு இன்ச் துண்டு (தோல் சீவவும்) பூண்டு - 10 பல் சோம்பு - ஒரு டீஸ்பூன் பட்டை - சிறு துண்டு கிராம்பு - 2 பச்சை மிளகாய் - 4 காய்ந்த மிளகாய் - 4 புதினா - ஒரு கைப்பிடி அளவு வெங்காயம் - 100 கிராம் (நறுக்கவும்) உப்பு - தேவைக்கேற்ப எண்ணெய் - 500 மில்லி செய்முறை: மரவள்ளிக்கிழங்கைத் தோல் சீவி துருவிக் கொள்ளவும். ஊறவைத்த பருப்புடன் இஞ்சி, பூண்டு, சோம்பு, பட்டை, கிராம்பு, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். பின்பு அதில் துருவிய மரவள்ளிக்கிழங்கு, நறுக்கிய வெங்காயம், புதினா, அரிசி மாவு சேர்த்துப் பிசையவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் மாவைச் சிறு சிறு வடைகளாகத் தட்டி எடுக்கவும். மரவள்ளிக்கிழங்கு மசால் வடை தயார். இது தயிர் சாதத்துக்கு சுவையாக இருக்கும். குச்சிக்கிழங்கு, குச்சிவள்ளிக்கிழங்கு, மரச்சினிக்கிழங்கு என்றும் மரவள்ளிக்கிழங்கு அழைக்கப்படுகிறது. மரவள்ளிக்கிழங்கு அல்வா தேவையானவை: துருவிய மரவள்ளிக்கிழங்கு - கால் கிலோ சீனி - 150 கிராம் நெய் - 150 கிராம் முந்திரி, பாதாம் - தலா 20 ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன் உப்பு - ஒரு சிட்டிகை செய்முறை: அடிகனமான கடாயில் 4 ஸ்பூன் நெய்விட்டு முந்திரி, பாதாம் வறுத்தெடுத்து வைக்கவும். பின் வாணலியில் 4 ஸ்பூன் நெய்விட்டு துருவிய மரவள்ளிக்கிழங்கைச் சேர்த்து நன்கு வதக்கி எடுக்கவும். அதே வாணலியில் சீனியைப் போட்டு, 50 மில்லி தண்ணீர்விட்டு, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கம்பி பதம் வரும் வரை காய்ச்சவும். பின்பு அதில் வதக்கி வைத்துள்ள மரவள்ளிக்கிழங்கைச் சேர்த்து நன்கு கிளறவும். நெய் பிரிந்து வந்தவுடன் ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி, பாதாம் சேர்த்து கிளறி எடுக்கவும். சுவையான அல்வா தயார். மரவள்ளிக்கிழங்கு முந்திரி கீர் தேவையானவை: மரவள்ளிக்கிழங்கு (வேக வைத்தது) - 100 கிராம் ஊறவைத்த முந்திரி - 10 ஏலக்காய் - 2 ஐஸ் கட்டிகள் - 2 சீனி - 6 டீஸ்பூன் செய்முறை: வேகவைத்த மரவள்ளிக்கிழங்கைத் துருவிக்கொள்ளவும். மிக்ஸியில் ஏலக்காய், ஊறவைத்த முந்திரி, துருவிய மரவள்ளிக்கிழங்கு சேர்த்து நைஸாக அரைக்கவும். அதில் சர்க்கரை, ஐஸ் கட்டிகள் சேர்த்து ஒரு திருப்புத் திருப்பவும். பின்பு தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். கீர் பரிமாறும் டம்ளரில் பரிமாறவும். இதை உடல் எடை அதிகரிக்க நினைப்பவர்கள் அடிக்கடி பருகலாம். மரவள்ளிக்கிழங்கு கொத்தமல்லி கார அடை தேவையானவை: மரவள்ளிக்கிழங்கு - கால் கிலோ (துருவவும்) பச்சரிசி - 250 கிராம் கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு (சேர்த்து) - 200 கிராம் காய்ந்த மிளகாய் - 6 இஞ்சி - ஒரு இன்ச் துண்டு (தோல் சீவவும்) வெங்காயம் - ஒன்று பூண்டு - 6 பல் நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு கப் எண்ணெய் - 500 மில்லி உப்பு - தேவைக்கேற்ப செய்முறை: அரிசி, பருப்பு வகைகளை இரண்டு மணி நேரம் ஊறவைத்து, பின்பு கழுவி வடித்து வைக்கவும். பின்பு அதில் இஞ்சி, காய்ந்த மிளகாய், வெங்காயம், பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். பின்பு அதில் துருவிய மரவள்ளிக்கிழங்கைச் சேர்த்து, ஒரு சுற்று சுற்றி பின்பு எடுத்து நறுக்கிய கொத்த மல்லித்தழை, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். தோசை தவாவில் எண்ணெய்விட்டு கொஞ்சம் கனமான அடைகளாக வார்த்து பொன்னிறமாகத் திருப்பிப் போட்டு எடுக்கவும். இதற்கு தொட்டுக்கொள்ள தேங்காய்ச் சட்னி ஏற்றது. மரவள்ளிக்கிழங்கு பட்டாணி தேங்காய்ப்பால் கிரேவி தேவையானவை: பொடியாக நறுக்கிய மரவள்ளிக்கிழங்கு - கால் கிலோ ஊறவைத்த பச்சைப் பட்டாணி - 200 கிராம் தேங்காய்ப்பால் - ஒரு டம்ளர் (அரை மூடியில் எடுத்தது) பச்சை மிளகாய் - 4 முந்திரி - 6 வெங்காயம் - 50 கிராம் நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு எண்ணெய் - 4 டீஸ்பூன் பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 2 உப்பு - தேவைக்கேற்ப செய்முறை: வாணலியில் நறுக்கிய மரவள்ளிக்கிழங்கு, ஊறவைத்த பச்சைப் பட்டாணி, உப்பு சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர்விட்டு வேகவிடவும். மிக்ஸியில் பச்சை மிளகாய், முந்திரியை ை விழுதாக அரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்பு வேகவைத்த மரவள்ளிக்கிழங்கு, பட்டாணி சேர்க்கவும். அதில் அரைத்த பச்சை மிளகாய், முந்திரி விழுதை சேர்த்து ஒரு கொதிவிடவும். பின்பு தேங்காய்ப்பால், உப்பு சேர்த்து நன்கு கலந்து இறக்கி, நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்த்தால் மரவள்ளிக்கிழங்கு பட்டாணி தேங்காய்ப்பால் கிரேவி தயார். மரவள்ளிக்கிழங்கு ஓட்ஸ் கட்லெட் தேவையானவை: மரவள்ளிக்கிழங்கு - கால் கிலோ ஓட்ஸ் - 100 கிராம் இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன் வெங்காயம் - 100 கிராம் புதினா - ஒரு கப் (நறுக்கியது) கரட் - ஒன்று (துருவவும்) பீன்ஸ் - 10 பச்சைப் பட்டாணி - 50 கிராம் பிரெட் தூள் - ஒரு கப் எண்ணெய் - 50 கிராம் உப்பு - தேவைக்கேற்ப. செய்முறை: மரவள்ளிக்கிழங்கை வேகவைத்து துருவிக்கொள்ளவும். பீன்ஸைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். பச்சைப் பட்டாணியை வேகவைக்கவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். ஓட்ஸை வறுத்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு வெங்காயம் சேர்த்து வதக்கி இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின்பு அதில் துருவிய கேரட், வேக வைத்த பட்டாணி, பொடியாக நறுக்கிய பீன்ஸ், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பின்பு மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், வேக வைத்து துருவிய மரவள்ளிக்கிழங்கு, புதினா சேர்த்து வதக்கி இறக்கவும். ஆறியதும் வறுத்து பொடித்த ஓட்ஸ் சேர்த்து நன்கு பிசையவும். தேவையான வடிவில் கட்லெட்டுகளாகத் தட்டி, பிரெட் தூளில் புரட்டி, தோசைக்கல்லில் எண்ணெய்விட்டு இரண்டு பக்கமும் பொன்னிறமாகச் சுட்டெடுக்கவும். வெங்காய காரச் சட்னி இதற்கு நல்ல காம்பினேஷன். மரவள்ளிக்கிழங்கு முறுக்கு தேவையானவை: மரவள்ளிக்கிழங்கு - கால் கிலோ பச்சரிசி மாவு - அரை கிலோ இஞ்சி - ஒரு துண்டு பச்சை மிளகாய் - 6 ஓமம் - ஒரு டீஸ்பூன் உப்பு - தேவைக்கேற்ப எண்ணெய் - அரை லிட்டர் வெண்ணெய் – 50 கிராம் செய்முறை: இஞ்சி, பச்சை மிளகாய், ஓமத்தை விழுதாக அரைத்துக்கொள்ளவும். பாத்திரத்தில் மரவள்ளிக்கிழங்கை வேகவைத்து துருவிக்கொள்ளவும். அதில் அரிசி மாவு, அரைத்த விழுது, உப்பு, வெண்ணெய் சேர்த்து முறுக்கு மாவு பதத்தில் பிசைந்துகொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்த தும் மாவை சிறு சிறு முறுக்குகளாகப் பிழிந்து பொரித்தெடுக்கவும். இதை மரவள்ளிக்கிழங்கு சீஸனில் குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டி யாக தரலாம். ஆரோக்கியமான உணவு இது. மரவள்ளிக்கிழங்கு காரப்புட்டு தேவையானவை: மரவள்ளிக்கிழங்கு - அரை கிலோ தேங்காய் - அரை மூடி (துருவவும்) கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன் வேர்க்கடலை - 50 கிராம் காய்ந்த மிளகாய் - 6 மல்லி (தனியா) - ஒரு டீஸ்பூன் எள் - ஒரு டீஸ்பூன் வெங்காயம் - 100 கிராம் கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு எண்ணெய் - 4 டீஸ்பூன் உப்பு - தேவைக்கேற்ப கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு - தலா ஒரு டீஸ்பூன் (தாளிக்க) செய்முறை: கடலைப்பருப்பு, வேர்க்கடலை, காய்ந்த மிளகாய், மல்லி, எள் ஆகியவற்றை வறுத்து கொரகொரப்பாகப் பொடித்துக்கொள்ளவும். மரவள்ளிக்கிழங்கை வேக வைத்து, தோலுரித்து உதிர்த்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்பு அதில் உதிர்த்து எடுத்த மரவள்ளிக்கிழங்கு, துருவிய தேங்காய், வறுத்துப் பொடித்த பொடி, உப்பு சேர்த்து நன்கு புரட்டவும். மரவள்ளிக்கிழங்கு புட்டு தயார். சாதத்தில் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும். மரவள்ளிக்கிழங்கு பெப்பர் ஃப்ரை தேவையானவை: மரவள்ளிக்கிழங்கு - அரை கிலோ மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன் கறிவேப்பிலை - 2 ஆர்க்கு, கார்ன் மாவு (அ) கடலை மாவு - 50 கிராம் மிளகுத்தூள் - 2 டீஸ்பூன், எண்ணெய் - அரை லிட்டர் உப்பு - ஒரு டீஸ்பூன் செய்முறை: மரவள்ளிக்கிழங்கைப் பெரிய துண்டுகளாக நறுக்கி நன்கு கொதிக்கும் நீரில் போட்டு, ஒரு மணி நேரம் மூடி வைக்கவும். பின்பு அதை வடித்து தோல் எடுத்து விரல் அளவு நீளத்துக்கு நறுக்கிக் கொள்ளவும். அதில் உப்பு, மஞ்சள்தூள், மிளகுத்தூள், கார்ன் மாவு (அ) கடலை மாவு சேர்த்து பிசறிக் கொள்ளவும். வாணலில் எண்ணெய்விட்டு கறிவேப்பிலையைப் பொரித்தெடுத்துக் கொள்ளவும். பின்பு அதில் பிசிறி வைத்துள்ள மரவள்ளிக்கிழங்கைப் போட்டு பொரித்தெடுக்கவும். சுவையான மரவள்ளிக்கிழங்கு பெப்பர் ஃப்ரை ரெடி. மரவள்ளிக்கிழங்கு மசாலா தட்டை தேவையானவை: மரவள்ளிக்கிழங்கு - கால் கிலோ பச்சரிசி மாவு - 300 கிராம் பொடித்த பொட்டு கடலை மாவு - 100 கிராம் மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை - 2 ஆர்க்கு ஊறவைத்த பயத்தம்பருப்பு, கடலைப்பருப்பு (சேர்த்து) - 50 கிராம் வேர்க்கடலை - 100 கிராம் (வறுத்துப் பொடிக்கவும்) பூண்டு - 20 பல் (நசுக்கவும்) இஞ்சித் துருவல் - 2 டீஸ்பூன் வெண்ணெய் - 50 கிராம் எண்ணெய் - அரை லிட்டர் உப்பு - தேவைக்கேற்ப செய்முறை: பாத்திரத்தில் வேகவைத்து துருவிய மரவள்ளிக் கிழங்கு, பச்சரிசி மாவு, பொடித்த பொட்டுக்கடலை மாவு, மிளகாய்த்தூள், கறிவேப்பிலை, ஊறவைத்த பயத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பொடித்த வேர்க்கடலை, நசுக்கிய பூண்டு, இஞ்சித் துருவல், உப்பு, வெண்ணெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் மாவை சிறு சிறு தட்டைகளாக தட்டிப் போட்டு பொரித்தெடுக்கவும். இது மாலை நேர ஸ்நாக்ஸாகச் சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும்.
Leave Comments