பொதுமக்கள் போராட்டங்களை தொடர்ந்து கொழும்பின் பல பகுதிகளை உயர்பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தினார் ரணில். இதன்மூலம் பொதுமக்களின் அடிப்படை உரிமை மீறப்படுவதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் போராட்ட காலத்தின் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பல பகுதிகளை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதாகத் தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை பரிசீலிக்க உயர் நீதிமன்றம் திகதி நிர்ணயித்துள்ளது. .
இந்த மனு இன்று முர்து பெர்னாண்டோ, எஸ். துரைராஜா மற்றும் யசந்த கோதாகொட ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்டது.
மேலும், சம்பந்தப்பட்ட மனுவை ஒக்டோபர் 22 ஆம் திகதி பரிசீலனைக்கு அழைக்கவும் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது.
செப்டம்பர் 23, 2022 அன்று, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால், கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் உள்ள பல இடங்களை உயர் பாதுகாப்பு வலயங்களாகப் பெயரிட்டு விசேட பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டார்.
ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் காரணமாக மக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதாக தீர்ப்பளிக்குமாறு கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டமா அதிபர், ஜனாதிபதியின் செயலாளர், பாதுகாப்புச் செயலாளர், பொலிஸ் மா அதிபர் உள்ளிட்டோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
Leave Comments