உத்தரப் பிரதேசத்தில் கடுமையான குளிர் நிலவுவதால், அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி கலந்து கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அயோத்தியில் இன்று (22) நடைபெறவுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி பங்கேற்கவில்லை. உத்தரப் பிரதேசத்தில் கடுமையான குளிர் நிலவுவதால் அவர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாகவே டெல்லி, உ.பி., ஹரியாணா, பஞ்சாப் என வட மாநிலங்களில் கடுமையான குளிர் வாட்டி வதைக்கிறது. இது மேலும் சில நாட்கள் தொடரும் என்றே இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் 96 வயதான அத்வானி, உ.பி.யில் கடும் குளிர் நிலவுவதன் காரணமாக அங்கு நடைபெறவுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் அவர் கலந்து கொள்ள இயலவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ராமர் கோயில் கும்பாபிஷேகம் குறித்து அத்வானி எழுதியிருந்த கட்டுரையில், “கடந்த 1990 செப்டம்பர், 25-ம் தேதி குஜராத்தின் சோம்நாத் பகுதியில் இருந்து உத்தரபிரதேசத்தில் உள்ள அயோத்திக்கு ராம ரத யாத்திரை மேற்கொண்டோம். அதில் பிரதமர் மோடியும் பங்கேற்றார். அப்போது அவர் பிரபலமானவர் அல்ல. ஆனால், அப்போதே அயோத்தியில் தனக்கு பிரம்மாண்ட கோயில் கட்ட பிரதமர் மோடியை, பகவான் ராமர் தேர்வு செய்துள்ளார். அதுதான் இப்போது செயல் வடிவம் கண்டுள்ளது. அந்த யாத்திரையின்போது அரங்கேறிய சம்பவங்கள் எனக்குள் மாற்றத்தை தந்தன. எங்களது ரதம் செல்லும் இடமெல்லாம் யாரென தெரியாத கிராம மக்கள் எங்களுக்கு அதீத வரவேற்பு கொடுத்தனர். அது பகவான் ராமருக்கு கோயில் வேண்டுமென மக்கள் விரும்பியதன் வெளிப்பாடு. வரும் 22-ம் தேதி ராமர் கோயிலில் கவுரவம் மட்டுமல்லாது மக்களின் நம்பிக்கையும் மீட்டெடுக்கப்பட உள்ளது” என்று குறிப்பிட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.
Leave Comments