விளைச்சலை அதிகரிக்கும் மண்புழு குளியல் நீர் தயாரிப்பது எப்படியென்பதை பற்றிய விபரம் இது.
110 அடி நீளம், 8 அடி அகலம், 3 அடி உயரத்துக்கு சிமெண்ட் தொட்டி அமைத்துக் கொள்ள வேண்டும். தொட்டியில் வெயில் படாத அளவுக்கு கீற்றுக் கொட்டகை அமைத்துக் கொள்ள வேண்டும். தொட்டியின் தரைதளத்தை தண்ணீர் வடிவது போல சாய்வாக அமைத்து தாழ்வான பக்கத்தில் ஒரு குழாயைப் பொருத்திக்-கொள்ள வேண்டும். தொட்டியின் தரைப்பகுதியில் ஓர் அங்குல உயரத்துக்கு ஆற்று மணலைப் பரப்பி, அதன் மீது இரண்டு அங்குல உயரத்துக்கு. காய்ந்த அல்லது பச்சையான இலை, தழைகள் என கிடைப்பவற்றைப். பரப்ப வேண்டும். அதற்கு மேல் அடுத்த அடுக்காக இரண்டேகால். அடி உயரத்துக்கு லேசான ஈரப்பதமுள்ள சாணத்தைப் பரப்பி, 10 கிலோ மண்புழுவை விட்டு... அதற்கு மேல் அரை அங்குல உயரத்துக்கு, வாழைச் சருகு, பயனற்ற காகிதங்கள், களைச் செடிகள், மட்கக்கூடிய துணிகள் ஆகியவற்றைப் போடவேண்டும். தினமும் காலையிலும் மாலையிலும் தண்ணீர் தெளித்து வர வேண்டும். நாம் தெளிக்கும் தண்ணீரும் மண்புழுக்களின் உடலில் சுரக்கும் வழுவழுப்பான திரவமும் ஒன்றாகக் கலந்து... அடுத்தடுத்த அடுக்குகளின் வழியாகக் கீழிறங்கி, குழாயின் வழியாக சொட்டத் தொடங்கும். இதுதான் மண்புழுக் குளியல் நீர். அதைப் பானையில் பிடித்துக் கொள்ள வேண்டும். முதல்முறை நீர் வெளி வர ஐந்து நாட்கள் பிடிக்கும். அதன் பிறகு, தொடர்ந்து 40 நாட்களுக்கு சொட்டிக் கொண்டேயிருக்கும். அதனால், குழாய்க்கு அடியில் நிரந்தரமாக ஒரு பானையை வைத்துவிட வேண்டும். மண்புழுவின் உணவுப் பாதையில் சுரக்கும் பல்வேறு வகையான என்சைம்கள், அமினோ அமிலங்கள் ஆகியவையும் இந்த திரவத்தில் அடங்கி இருப்பதால், இது மிகச் சிறந்த நுண்ணூட்டச் சத்துக்களைக் கொண்டிருக்கும். மேலே சொல்லியிருக்கும் அளவிலான தொட்டியிலிருந்து தினமும் சுமார் 8 லிட்டர் மண்புழு குளியல் நீர் கிடைக்கும். தொட்டி அமைத்த 15 நாட்களுக்குப் பிறகு, 5 நாட்களுக்கு ஒரு முறை 300 கிலோ மண்புழு உரமும் எடுக்கலாம். 40 நாட்கள் கழித்து, தொட்டியில் உள்ள அனைத்தையும் முழுமையாக அகற்றிவிட்டு, ஆற்றுமணல், இலைதழைகள், சாணம், மண்புழுக்கள்... எனப் புதிதாக அமைக்கவேண்டும். தொட்டி, கொட்டகை அமைக்க 7 ஆயிரம் ரூபாய் நிரந்தர செலவாகும். ஒவ்வொரு 45 நாட்களுக்கும் 120 லிட்டர் மண்புழு: குளியல் நீர் மற்றும் 600 கிலோ மண்புழு உரம் கிடைக்கும். இதற்கான செலவு... 2 ஆயிரம் ரூபாய் மட்டுமே. 100 லிட்டர் தண்ணீரில் ஒரு லிட்டர் மண்புழு குளியல் நீரைக் கலந்து பயிர்களுக்கு இலை வழி ஊட்டமாகத் தெளிக்க வேண்டும். இதை அனைத்துப் பயிர்களுக்கும் தெளிக்கலாம். பூ பூத்து... பிஞ்சு பிடிக்கும் சமயங்களில் தெளித்தால், அதிக பூக்கள் பூத்து, பிஞ்சுகளும் அதிகளவில் உருவாகும். தவிர, செடிகள் சோர்வுற்றிருக்கும் சமயங்களில். தெளித்தால்... உடனே பலன் தெரியும். ஆண்டுக்கு இரு முறை பொலிதீன் பையில் 250 மில்லி மண்புழுக் குளியல் நீரை நிரப்பி, அதில் தென்னை மரத்தின் வேரை நுழைத்துக் கட்டி வைத்தால், தென்னையில். குரும்பை உதிர்தல் பிரச்னை இருக்காது.
Leave Comments