தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்குமாறு மோடி மூடிய அறைக்குள் வலியுறுத்தினார். வலியுறுத்த மட்டுமே எம்மால் முடியும் என்றார் இந்திய தூதர்
“இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு வழங்குமாறு, ஜனாதிபதி ரணில் இந்தியாவுக்கு வந்தபோது, மூடிய அறைக்குள் மோடி வலியுறுத்தினார். எம்மால் வலியுறுத்த மட்டுமே முடியும்“ என இலங்கைக்கான இந்திய தூதர் சந்தோஸ் ஜா தமிழ் கட்சிகளிடம் தெரிவித்தார். தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதிநிதிகளுக்கும் இந்திய தூதருக்குமிடையில் இன்று (22) சந்திப்பு நடந்தது. கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது. வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டும், அதிகாரம் பகிரப்பட்டு மாகாணசபை தேர்தல் நடத்தப்பட வேண்டும், தேர்தல் நடத்தப்படா விட்டால், திரும்பத் திரும்ப நாம் உங்களிடம் இப்படி முறையிட்டுக் கொண்டிருப்பதை விட வேறு வழியில்லையென தமிழ் தரப்புக்கள் தெரிவித்தன. முல்லைத்தீவில் மகாவலி திட்டத்தின் கீழ் தமிழ் மக்களின் பூர்வீக நிலத்தில் 600 சிங்கள குடும்பங்களை குடியமர்த்த திட்டமிடப்படுகிறது, திருகோணமலையில் மெகா சிட்டி திட்டத்தை முன்னெடுப்பதாக கூறி இந்தியாவை தவிர்த்து பிற நாடுகளை உள்ளீர்க்கும் முயற்சி நடக்கிறது, மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை விவகாரம், பலாலி விமானத்தள அபிவிருத்தி உள்ளிட்ட பல விடயங்களை தமிழ் தரப்புக்கள் சுட்டிக்காட்டின. இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள சமயத்தில் இந்தியா நிதியுதவியளித்தது. தற்போது தேர்தல் நடத்த பணமில்லையென அரசு கூறுகிறது. இணைந்த வடக்கு கிழக்கு தேர்தலை நடத்துங்கள் என இந்தியா பணம் வழங்கலாம் என்றும் தமிழ் கட்சிகள் யோசனை சொன்னார்கள். இந்திய தூதர் சிரித்தபடி கேட்டுக் கொண்டிருந்தார். அபிவிருத்தி திட்டங்களுடன், அரசியல் தீர்வையே இந்தியா இலக்காக கொண்டுள்ளதாக தூதர் தெரிவித்தார். இந்தியாவிலிருந்து கடலடி மார்க்கத்தில் மின்சாரம் கொண்டு வரும் திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார். வடக்கு கிழக்கு இணைப்பு, தேர்தல், தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விவகாரங்களில் இந்தியா இன்னும் அதிக வகிபாகத்தை கொண்டிருக்க வேண்டுமென தமிழ் கட்சிகள் வலியுறுத்தின. இதற்கு பதிலளித்த இந்திய தூதர்- “இந்தியாவும், சர்வதேசமும் இலங்கையிடம் இவற்றை சொல்லத்தான் முடியும். இந்தியா தொடர்ந்து இதை வலியுறுத்தி வருகிறது. ரணில் விக்கிரமசிங்க இந்தியா வந்தபோது, பிரதமர் மோடி மூடிய அறைக்குள் இந்த விடயங்களை வலியுறுத்தினார். பின்னர் பகிரங்கமாகவும் சொன்னார். இந்தியா தொடர்ந்து வலியுறுத்தும்“ என்றார். மாலை 4 மணியளவில் ஆரம்பித்த சந்திப்பு 5.45 மணியளவில் முடிவடைந்தது.
Leave Comments